Sunday, February 13, 2005

மில்க் ரொபி

அப்பொழுதெல்லாம் பெரியளவில் இனிப்புகள் வாங்கித் தரமாட்டார்கள். ஏதாவது ருசிக்குச் சாப்பிட வேண்டும் அதுவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்றால் மில்க் ரொபி தான் ஆபத்தாண்டவர். இதை வீட்டில் செய்யும் போது மகள் சமையல் பழகுகிறாள் என்ற நினைப்பில் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு இதை எளிதாகச் செய்து கொள்ளவும் முடியும். சரி ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே.

தேவையான பொருட்கள்
ஒரு ரின் மில்க்
ஒன்றரை பேணி சீனி
அரை பேணி தண்ணீர்
வனிலா
தேவையான அளவு கஜூ

செய்முறை
சீனியையும் தண்ணீரையும் சேர்த்துக் காய்ச்சிக் கொள்ளுங்கள். இப்பொழுது ரின் மில்க்கையும் சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். என்ன பதார்த்தம் இறுகி வருகின்றதா? அப்படியானால் வனிலா, கஜூ சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள். இதனை வெண்ணை தடவிய தட்டில் போட்டு நன்றாகப் பரவி விடுங்கள். ஆறிய பின்னர் உங்கள் விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.

11 comments:

Jsri said...

மன்னிக்கணும்; ரின் மில்க், பேணி, கஜீ இதெல்லாம் என்னன்னே புரியலையே. வேற வார்த்தைகள் இதுக்கெல்லாம் இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்களேன். நன்றி.

D.V.Babu said...

இலங்கைத் தமிழில் அமைந்துள்ள தங்களின் இலங்கை சமையல் குறிப்புகள் இரட்டிப்புச் சுவையைத் தருகின்றது. எனது அறுசுவை இணையத்தளத்தில் இலங்கைத் தமிழ் சமையலுக்கென ஒரு தனிப் பகுதியைத் தொடங்க மிகவும் ஆசை. இது குறித்து தங்களுடன் மின்னஞ்சல் மூலமாக ஆலோசிக்க விரும்புகின்றேன். இயன்றால் babu@arusuvai.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

அன்புடன்
D.V.பாபு
www.arusuvai.com

மதி கந்தசாமி (Mathy) said...

ஜெ!,

நான் சொல்றேன்.

டின் மில்க் - Condensed milk

பேணி - கப், எவர்சில்வர் டம்ளர் எல்லாம் 'பேணி'தான்.

கஜூ - முந்திரிப் பருப்பு

====

இந்திராணி தொடர்ந்து எழுதுங்க. என்ன ஒண்டரைப் பேணி சீனி என்றதும் பயமாக இருக்கிறது. ஆனால், அந்த பருத்தித் துறைவடையை ஒரு முறை செய்து பார்க்க உத்தேசம்.

Indrany said...

விளக்கம் தந்ததற்கு நன்றி மதி.
இன்னுமா நீங்கள் பருத்தித்துறை வடை செய்து பார்க்கவில்லை? என்னங்க நீங்க?

Jsri said...

மதி நன்றி. ஆனா முந்திரிப்பருப்பை பொடி செய்து போடணுமா, அப்படியேவா? அதை ஏன் நீங்க குறிக்கலை? அப்படியே போட்டா,அ து வெறும் மில்க் பேஸ்ட் மாதிரிதானே இருக்கும். எனக்கெல்லாம் அநியாயத்துக்கு விவரமா சொன்னாத்தான் புரியும். :(

Indrany said...

ஜேசிறி
உடைத்த முந்திரிப்பருப்பை பாதியாக்கிவிட்டுப் போடுங்கள். சாப்பிடும்போது அப்படியே முழுங்கிவிடாதீர்கள்

Indrany said...

பாபு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

வணக்கம் இந்திராணி அன்ரி.
அப்படியே நீங்களும் உங்கள் சீடப்பிள்ளைகளும் செய்து பார்க்கிற பலகாரங்களை சிங்கப்பூருக்கு அனுப்பினா சாப்பிட்டுப் பார்த்து விமர்சனம் பண்ணுவேன்.முதலில் கனடாவிலிருந்து பருத்தித்துறை வடையை எதிர்பார்க்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy) said...

//முதலில் கனடாவிலிருந்து பருத்தித்துறை வடையை எதிர்பார்க்கிறேன்.//

appadiyae ethirpaarththaNdu irum aisE. naanum pariththiththuRai vadaiya, kuzaichchu, pENiyaala thatti thaaRathukku oru aaLai ethirpaakkiRan. vanthu senchu kudum. :hahahaha:

ஈழநாதன்(Eelanathan) said...

ம்ம் முதன் முதல் செய்து பழகிறாக்களிட்டை நம்பி வாங்கிச் சாப்பிட நான் தயாரில்லை.பார்சலிலை அனுப்பினால் வீட்டிலை இருக்கிற பொடியளிட்டைக் குடுத்து எத்தனைநாளைக்கு உயிரோடை இருக்கிறாங்கள்.,ஆராருக்கு பல்லு உடைஞ்சிது எண்டு ஒரு ஆராய்ச்சி பண்ணி விமர்சனம் எழுதலாமெண்டு பார்த்தன்.நீங்களே செய்து சாப்பிடுங்கோ ஒரு இரண்டு மூன்று நாளைக்கு ஆளை இணையப் பக்கம் காணாட்டில் நாங்களாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான்

ஈழநாதன்(Eelanathan) said...

நான் நினைச்சது சரியாப்போச்சு.ஆளைக் காணேலை.பருத்தித்துறை வடை மோசம்பண்ணிவிட்டது