Sunday, February 13, 2005

கத்தரிக்காய் சம்பல்

கத்தரிக்காயில் எத்தனையோ விதமாக சமையல் செய்வார்கள். ஈழத்தில் சாவகச்சேரி என்ற நகரத்தில் கத்தரிக்காயைப் பொரித்து மிளகாய் வெங்காயம் எல்லாம் சேர்த்து ஒருவிதமான துவையல் செய்வார்கள். ஆகா...ஆகா.. என்ன சுவை. அதனோடையே ஒரு கோப்பை சோற்றையே உள்ளே தள்ளிவிடலாம்.

பெரிய கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாகக் கழுவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை எண்ணையில் போட்டு கலகல என வரும் வரை பொரித்து எடுங்கள். பொரித்து எடுத்தாயிற்றா? சிறுசிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயம் (ஒரு வெங்காயம் போதும்) ,பிஞ்சு மிளகாய் (நாலு ஐந்து), தேவைக்களவான உப்பு, தேசிப்பழச் சாறு, அளவான பால் (தேங்காய்ப் பால் அல்லது பசுப்பால்) சேர்த்து கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போ எடுத்து சுவை பாருங்கள். என்ன நல்லா வந்திருக்கா?

இதைப் பற்றி பக்கத்து வீட்டு பருத்தித்துறை அம்மாவிடம் சொன்னேன். அவ சொன்னா "பிள்ளை ஊரிலை கத்தரிக்காயை நெருப்பிலை சுட்டு தோலை உரிச்சு இதே போலைத்தான் செய்யிற நாங்கள். அவையள் தோலோடை பொரிச்சு செய்யினம் நாங்கள் எண்ணையில்லாமல் செய்யிறம் அவ்வளவுதான். "உனக்கு வினாகிரி போட்டு கத்தரிக்காய் சம்பல் செய்யத் தெரியுமே? இப்ப நேரமில்லை பிறகு சொல்லுறன்“

அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும்.

மில்க் ரொபி

அப்பொழுதெல்லாம் பெரியளவில் இனிப்புகள் வாங்கித் தரமாட்டார்கள். ஏதாவது ருசிக்குச் சாப்பிட வேண்டும் அதுவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்றால் மில்க் ரொபி தான் ஆபத்தாண்டவர். இதை வீட்டில் செய்யும் போது மகள் சமையல் பழகுகிறாள் என்ற நினைப்பில் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு இதை எளிதாகச் செய்து கொள்ளவும் முடியும். சரி ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே.

தேவையான பொருட்கள்
ஒரு ரின் மில்க்
ஒன்றரை பேணி சீனி
அரை பேணி தண்ணீர்
வனிலா
தேவையான அளவு கஜூ

செய்முறை
சீனியையும் தண்ணீரையும் சேர்த்துக் காய்ச்சிக் கொள்ளுங்கள். இப்பொழுது ரின் மில்க்கையும் சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். என்ன பதார்த்தம் இறுகி வருகின்றதா? அப்படியானால் வனிலா, கஜூ சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள். இதனை வெண்ணை தடவிய தட்டில் போட்டு நன்றாகப் பரவி விடுங்கள். ஆறிய பின்னர் உங்கள் விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.