Wednesday, January 19, 2005

மாலுப் பாண்

சுலபமான சாப்பாடாக அதே நேரத்தில் வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் போட வேண்டுமென்றால் கடையில் நான் வாங்கி சாப்பிடும் உணவு மாலுப் பாண்.
சிங்களத்தில் மாலு என்றால் மீன். ஆக மீன்கறியை உள்ளடக்கிய பாண் மாலுப்பாணாயிற்று. மீன் மட்டுமல்லாமல் உருளைக் கிழங்கு, சீனிச் சம்பல் என்று உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு இந்த பாணைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்
1. மூன்று பேணி மா
2. மூன்று தேக்கரண்டி ஈஸ்ற் (Yeast)
3. ஒரு தேக்கரண்டி சீனி
4. அரை மேசைக்கரண்டி பட்டர் அல்லது மாஜரீன் அல்லது எண்ணை
5. ஒரு தேக்கரண்டி உப்பு
6. உங்களுக்கு விரும்பிய கறி
7. ஒரு முட்டை மஞ்சற் கரு

செய்முறை
ஈஸ்ற், சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் இட்டு மூன்று தேக்கரண்டி இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு நிமிடங்களுக்குள் இக் கலவை பொங்கி வரும். இதனை மா, உப்பு, பட்டர் ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இதனை சிறிது நேரம் தகுந்த மூடியினால் மூடி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். உருண்டைகள் சம அளவாக வருவதற்கு ஒரு வழியை சொல்லுகிறேன். மா கலவையை முதலில் இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இரண்டை நாலாக்கி நாலை எட்டாக்கி எட்டை பதினாறாக்குங்கள். இப்படிச் செய்யும் போது நாங்கள் எடுத்துக் கொண்ட இந்த அளவுக்கு எல்லாமாக 32 சம அளவிலான உருண்டைகளைச் செய்து கொள்ளலாம்.

இதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமான கறியினைச் செய்து கொள்ளுங்கள். மீனோ, இறைச்சியோ, மரக்கறி உணவோ என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று செய்யப் படும் உணவானது கெட்டியாக இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு உருண்டையினுள்ளும் மோதகத்தில் உள்ளிடுவது போல் கறியினை இட்டு மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் எண்ணை தடவிய தட்டில் அழகாக எல்லா உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள். வேகும் போது இதன் மேற்பக்கம் பொன்னிறமாக வருவதற்கு நன்றாக அடித்த முட்டையின் மஞ்சற் கருவை ஒரு தூரிகையினால் தொட்டு தடவிவிடுங்கள். முட்டையை விரும்பாதவர்கள் பால் பட்டர் கலந்த கலவையை பூசிக் கொள்ளலாம் அல்லது தேனும் சிறிது தண்ணீரும் கலந்த கலவையைப் பூசிக் கொள்ளலாம்.

இப்பொழுது 150Cயில் 30 நிமிடங்கள் அவனில் சூடாக்கிக் கொள்ளுங்கள்
என்ன கருகாமல் எடுத்துவிட்டீர்களா? பலே. என்ன 32 மாலுப் பாணையும் நீங்களே சாப்பிடப் போகிறீர்களா? என்னங்க நீங்க..

மைசூர் பாகு

பெயரைக் கேட்டவுடன் இது எங்கிருந்து வந்தது என்று தெரிந்து விடும்.ஆகவே பெரிதாக இதைப் பற்றி சொல்லிக் கொள்ளாமல் மைசூர் பாகுவை செய்து கொள்ளுவோம்.

தேவையான பொருட்கள்
1. ஒரு பேணி கடலைமா
2. இரண்டு பேணி சீனி
3. இரண்டு பேணி தண்ணீர்
4. 250 கிராம் அளவிலான நெய் அல்லது பட்டர்

செய்முறை
கடலை மாவை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். சீனியையும் தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் காய்ச்சிக் கொள்ளுங்கள். அதனுள் மாவைப் போட்டு சட்டியில் ஒட்டாமல் இருக்க அவ்வப் போது நெய் அல்லது பட்டரைச் சேர்த்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும். பதம் நன்றாக வந்தபின் தட்டையான பாத்திரத்தில் பரவி உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். என்ன மைசூர் பாகு சுவைக்கிறதா?

Tuesday, January 18, 2005

கடலைப் பருப்பு லட்டு

தொட்டால் துவண்டு விடும் என்று சொல்லுவார்கள். இது தொட்டால் உதிர் ந்து விடும். அந்தளவுக்கு மென்மையானது. மிகப் பக்குவமாக எடுத்து சாப்பிட வேண்டிய லட்டு இது.

தேவையான பொருட்கள்
1. ஒரு பேணி கடலைப் பருப்பு
2. அரைப் பேணி சீனி
3. 200கிராம் அளவிலான பட்டர்
4. ஏலக்காய் (வாசனைக்காக)
5. எண்ணை

செய்முறை
கடலைப் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பின்னர் தண்ணீரை நீக்கி விட்டு எண்ணையில் சலசலக்கப் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பொரித்தெடுக்கப் பட்ட கடலைப் பருப்பை நன்கு ஆறவிட்டு அரைத்துக் கொள்ளுங்கள். சீனியினையும் நன்றாக மாப் போல் அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள். அரைத்தெடுக்கப் பட்ட சீனி, கடலைப் பருப்பு இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது பட்டரை உருக்கி கலந்து வைத்திருக்கும் சேர்வையில் சேர்த்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான கடலைப் பருப்பு லட்டு தயார்.

Monday, January 17, 2005

மஸ்கற்

மஸ்கற் செய்யும்போது மணியண்ணை நினைவுதான் வரும். சமையற் கலை வல்லுனர் அவர். மஸ்கற் செய்ய வேணடுமென்றால், கூப்பிடுங்கள் மணியண்ணனை என்று சொல்லுமளவுக்கு மஸ்கற்றில் தனது பெயரையே பதித்தவர். மஸ்கற்றைச் செய்யும் பக்குவத்தை எனக்கு அழகாகச் சொல்லித் தந்தவர்.

இரத்தத்தில் கொழுப்பு, சீனி அதிகமானவர்கள் மஸ்கற்றை விட்டு சற்றே விலகி நில்லுங்கள் please.

தேவையான பொருட்கள்
1. ஒரு பேணி கோதுமை மா
2. ஒன்றேமுக்கால் பேணி சீனி
3. சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய்
4. தேவைக்கேற்ப கஜு
5. வர்ணத்திற்கு ஒறேஞ் நிற கலரிங்

செய்முறை
மாவினை றொட்டிக்குக் குழைப்பது போல் நன்றாக பதமாக குழைத்தெடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு ( இந்த அனவுக்கு ஒரு பேணி தண்ணீர் போதுமானது) கலந்து கரைத்து வைக்கவும். தண்ணீர் மிதந்து மாக்கலவை பாத்திரத்தின் அடியில் பால் போல் படிந்திருக்கும் நிலை வந்தபின் தண்ணீரை ஊற்றி விட்டு அடியிலிருக்கும் மாவினை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிரித்தெடுக்கப் பட்ட மாக்கலவையில் வர்ணத்திற்காக சிறுதுளிகள் ஒறேஞ் கலரிங்கை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது சீனியினைக் காய்ச்சத் தொடங்குங்கள். சீனி உருகி வந்தபின் மாக்கலவையை அதனில் போட்டு கரண்டியினால் கிண்டத் தொடங்குங்கள். பதார்த்தம் சட்டியில் ஒட்டாதிருக்கும் பொருட்டு அப்பப்போது நெய் அல்லது வெண்ணையை விட்டு பதமாக வரும் வரை கிண்டிக் கொண்டிருங்கள். சரியான பதத்திற்கு வந்தபின் பொடிதாக்கிய கஜுவினைச் சேர்த்து ஒரு தட்டையான பாத்திரத்தில் பரவி சூடு ஆறியபின் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வெட்டிக் கொள்ளுங்கள்.

மஸ்கற் தயார் சுவைத்துப் பாருங்கள்

Thursday, January 13, 2005

வட்டிலப்பம்

எதனால் இதற்கு வட்டிலப்பம் என்று பெயர் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோருமே வட்டிலப்பம் என்றுதான் சொல்கிறார்கள். ஆகவே அதன் பெயரைப் பற்றி நாங்கள் ஆராய்ந்து நேரத்தைப் போக்காமல் வட்டிலப்பத்தை செய்து பார்த்து அதன் சுவையைப் பார்ப்போமே.

தேவையான பொருட்கள்:
1. எட்டு முட்டைகள்
2. 500 மி.லீற்றர் தேங்காய்ப் பால் (கெட்டியானது)
3. 500 கிராம் சர்க்கரை அல்லது கித்துள் அல்லது பனங்கட்டி
4. ஒன்றரை மேசைக்கரண்டி (Brown) சீனி
5. ஒரு தேசிக்காய்
6. 4-5ஏலக்காய்
7. வனிலா
8. 10-15கஜு

செய்முறை
முட்டை, தேங்காய்ப் பால், சர்க்கரை, சீனி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு தேசிக்காயினை நன்றாக சுத்தம் செய்து அதன் தோலை தூளாகத் துருவி கலவையுடன் கலந்து கொள்ளுங்கள்.
வாசனைக்காக ஏலத்தினை சூடாக்கி தோல் நீக்கி அரைத்து அதனையும் கலவையில் போட்டு வனிலா, கஜு ஆகியவற்றை சேர்த்து கலந்துவிட்டால் வட்டிலப்பத்திற்கான 90 வீதமான வேலைகள் முடிந்துவிட்டன.

உங்கள் விருப்ப்பத்திற்கேற்ப சிறு சிறு பாத்திரங்களில் கலவையை விட்டு, நீர் விட்ட பேக்கிங் தட்டில் வைத்து 150Cயில் 45 நிமிடங்கள் சூடாக்கினால் வட்டிலப்பம் தயார்.

நீங்கள் விரும்பினால் நீராவியிலும் இதனைச் செய்து கொள்ளலாம்.
இப்பொழுது நூறு வீதமான வேலைகள் முடிந்துவிட்டன சுவை பார்க்கத்தான் நீங்கள் வேண்டும்.

Wednesday, January 12, 2005

முட்டையில்லாத கேக்

முட்டை சைவமா? அசைவமா? பதில் தெரியாமல் குழம்புகிறீர்களா? மற்றவர்கள் கேக் சாப்பிடும் போது அதில் முட்டை போட்டிருக்கிறதே என்னால் சாப்பிட முடியவில்லையே என்று ஆதங்கப் பட்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். முட்டையே போடாமல் உங்களுக்கு ஓரு சுத்தமான சைவ கேக் செய்யும் முறையை சுத்தமாக இங்கே தருகிறோம்.

தேவையான பொருட்கள்
1. ஓரு ரின் மில்க்
2. அரைச் சுண்டு சீனி
3. 250 கிராம் பட்டர்
4. 250 கிராம் கோதுமை மா
5. இரண்டு தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
6. ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா
7. சிறுசிறு துகள்களாக்கிய பேரிச்சம் பழம்(ஒரு கப்)
8. தேவையான அளவு எசன்ஸ்
9. ஒரு தேக்கரண்டி கொக்கோ பவுடர்
10 இரண்டு மேசைக் கரண்டி பால்

செய்முறை
பதார்த்த்தை கலப்பதற்கு முன் அவன்(Oven)ஐ 150C யில் தயார்நிலையில வைத்துக் கொள்ளவும். இவற்றை ஆரம்பிக்குமுன் ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே பேரிச்சம்பழத்துண்டுகளை தேயிலை (இரண்டு பை தேயிலை)யில் ஊற விடவும்.

முதற் கலவை
ரின் மில்க், சீனி,பட்டர் ஆகியவற்றை சீனி முற்றாககக் கரைந்து பதமாக வரும்வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இரண்டாவது கலவை
மா, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் மூன்றையும் ஒன்றாக சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

முதலாவது கலவையுடன் ஏற்கனவே தேயிலையில் ஊறியிருக்கும் பேரிச்சம் பழத் துண்டுகளை எடுத்து கலந்து கொள்ளவும். இதனுடன் இரண்டாவது கலவையை சேர்த்து மரக்கரண்டியால் நன்றாகச் கலந்து கொள்ளவும்.

பின்னர் நன்கு சூடாக்கிய பாலில் பேக்கிங் சோடாவைக் கலந்து தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் கலவையுடன் நன்கு சேர்த்து விடவும். இறுதியாக வனிலா எசனையும் சேர்த்து அவனில் 45 நிமிடம் பேக்கிங் (Bake) செய்தால் உங்களுக்கான வெஜிற்றேரியன் கேக் தயார்.

அவனில் மட்டுமன்றி அவசரத்திற்கு மைக்ரோவேவிலும் இதே போன்று நீங்கள் செய்து கொள்ளலாம். மைக்ரோவேவில் செய்யும் போது பாத்திரத்திற்கு வெண்ணை தடவிக் கொள்ளுங்கள்.

அதுசரி முட்டை சைவமா? அசைவமா?

களுதொதல்

இலங்கையில் கதிர்காமம் யாத்திரை போய் வருபவர்கள் கையில் இது கண்டிப்பாக இருக்கும். நீண்ட காலம் வைத்திருந்து பாவிக்கக் கூடிய சுவை கூடிய ஒரு இனிப்புப் பதார்த்தம். சிங்களத்தில் களு என்றால் கறுப்பு. இந்தப் பதார்த்தம் கறுப்பாக இருப்பதால் களுதொதல் என்ற பெயர் இதற்கு. இதில் அதிகமான கொழுப்புச் சத்து இருப்பதால் இதைப் பார்த்துச் செய்வது மட்டுமல்ல பார்த்துச் சாப்பிடவும் வேண்டும்.

உண்மையில் களுதொதலுக்கு கித்துள் எனப்படும் ஒருவகை இனிப்பையே சேர்த்துக் கொள்வார்கள். எல்லோராலும் அதைப் பெற முடியாததால் கித்துளுக்குப் பதிலாக இங்கு சீனியைப் போட்டு செய்முறை தரப்பட்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்
1. நான்கு தேங்காய்கள்
2. ஒரு சுண்டு சிவத்த அரிசி மா
3. இரண்டு கிலோ சீனி (brown suger)
4. கஜு (தேவையான அளவு)
5. ஏலம் (சுவைக்கேற்ப)

செய்முறை
தேங்காய்களைத் துருவி தண்ணீர் கலந்து கெட்டியான பாலாக பிளிந்து எடுத்துக் கொள்ளவும்.

பிளிந்து எடுக்கப் பட்ட பால், சீனி, அரிசிமா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வாணலியில் இட்டு அளவான சூட்டில் வாணலியில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும். சரியான பதம் வரும்போது வாசனைக்கு தூளாக்கிய ஏலத்தினையும் சுவைக்கு சிறிதாக்கிய கஜுவையும் சேர்த்து தட்டையான பாத்திரத்தில் பரப்பி விட வேண்டும். சூடு ஆறியதும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்று மைக்ரோவேவ் சமையலறையில் முன்ணணியில் இடம் பிடித்துள்ளதால், களுதொதலை சுலபமான முறையில் மைக்ரோவேவில் செய்யும் முறை கீழே தரப்பட்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்
1. 500மி.லீற்றர் தேங்காய்பால்(சுலபமாக ரின்னில் கிடைக்கிறது)
2. 250 கிராம் சிவத்த அரிசிமா
3. 750 கிரைம் சீனி (brown suger)
4. கஜு
5. ஏலம்
6. தண்ணீர் (இரண்டு கோப்பை)

இவற்றை ஒன்றாகக் கலந்து மைக்ரோவேவில் வைத்து 10 நிமிடங்கள் சூடாக்கவும். பின்னர் நன்றாகக் கிளறிவிட்டு மீண்டும் 10 நிமிடங்கள் சூடாக்கவும். இப்படி மேலும் இருதடவைகள் செய்ய வேண்டும். நான்காவது தடவை கலவையை நன்கு கிளறிய பின்னர் எட்டு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து சூடாக்க வேண்டும். இறுதியாகக் கலவையை எடுத்து ஏலம், கஜு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து விட்டு மேலும் எட்டு நிமிடங்கள் மைக்ரோவேவில் சூடாக்கி எடுத்தால் களுதொதல் தயார்.