Wednesday, January 19, 2005

மாலுப் பாண்

சுலபமான சாப்பாடாக அதே நேரத்தில் வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் போட வேண்டுமென்றால் கடையில் நான் வாங்கி சாப்பிடும் உணவு மாலுப் பாண்.
சிங்களத்தில் மாலு என்றால் மீன். ஆக மீன்கறியை உள்ளடக்கிய பாண் மாலுப்பாணாயிற்று. மீன் மட்டுமல்லாமல் உருளைக் கிழங்கு, சீனிச் சம்பல் என்று உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு இந்த பாணைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்
1. மூன்று பேணி மா
2. மூன்று தேக்கரண்டி ஈஸ்ற் (Yeast)
3. ஒரு தேக்கரண்டி சீனி
4. அரை மேசைக்கரண்டி பட்டர் அல்லது மாஜரீன் அல்லது எண்ணை
5. ஒரு தேக்கரண்டி உப்பு
6. உங்களுக்கு விரும்பிய கறி
7. ஒரு முட்டை மஞ்சற் கரு

செய்முறை
ஈஸ்ற், சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் இட்டு மூன்று தேக்கரண்டி இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு நிமிடங்களுக்குள் இக் கலவை பொங்கி வரும். இதனை மா, உப்பு, பட்டர் ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இதனை சிறிது நேரம் தகுந்த மூடியினால் மூடி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். உருண்டைகள் சம அளவாக வருவதற்கு ஒரு வழியை சொல்லுகிறேன். மா கலவையை முதலில் இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இரண்டை நாலாக்கி நாலை எட்டாக்கி எட்டை பதினாறாக்குங்கள். இப்படிச் செய்யும் போது நாங்கள் எடுத்துக் கொண்ட இந்த அளவுக்கு எல்லாமாக 32 சம அளவிலான உருண்டைகளைச் செய்து கொள்ளலாம்.

இதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமான கறியினைச் செய்து கொள்ளுங்கள். மீனோ, இறைச்சியோ, மரக்கறி உணவோ என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று செய்யப் படும் உணவானது கெட்டியாக இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு உருண்டையினுள்ளும் மோதகத்தில் உள்ளிடுவது போல் கறியினை இட்டு மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் எண்ணை தடவிய தட்டில் அழகாக எல்லா உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள். வேகும் போது இதன் மேற்பக்கம் பொன்னிறமாக வருவதற்கு நன்றாக அடித்த முட்டையின் மஞ்சற் கருவை ஒரு தூரிகையினால் தொட்டு தடவிவிடுங்கள். முட்டையை விரும்பாதவர்கள் பால் பட்டர் கலந்த கலவையை பூசிக் கொள்ளலாம் அல்லது தேனும் சிறிது தண்ணீரும் கலந்த கலவையைப் பூசிக் கொள்ளலாம்.

இப்பொழுது 150Cயில் 30 நிமிடங்கள் அவனில் சூடாக்கிக் கொள்ளுங்கள்
என்ன கருகாமல் எடுத்துவிட்டீர்களா? பலே. என்ன 32 மாலுப் பாணையும் நீங்களே சாப்பிடப் போகிறீர்களா? என்னங்க நீங்க..

No comments: