Monday, January 17, 2005

மஸ்கற்

மஸ்கற் செய்யும்போது மணியண்ணை நினைவுதான் வரும். சமையற் கலை வல்லுனர் அவர். மஸ்கற் செய்ய வேணடுமென்றால், கூப்பிடுங்கள் மணியண்ணனை என்று சொல்லுமளவுக்கு மஸ்கற்றில் தனது பெயரையே பதித்தவர். மஸ்கற்றைச் செய்யும் பக்குவத்தை எனக்கு அழகாகச் சொல்லித் தந்தவர்.

இரத்தத்தில் கொழுப்பு, சீனி அதிகமானவர்கள் மஸ்கற்றை விட்டு சற்றே விலகி நில்லுங்கள் please.

தேவையான பொருட்கள்
1. ஒரு பேணி கோதுமை மா
2. ஒன்றேமுக்கால் பேணி சீனி
3. சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய்
4. தேவைக்கேற்ப கஜு
5. வர்ணத்திற்கு ஒறேஞ் நிற கலரிங்

செய்முறை
மாவினை றொட்டிக்குக் குழைப்பது போல் நன்றாக பதமாக குழைத்தெடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு ( இந்த அனவுக்கு ஒரு பேணி தண்ணீர் போதுமானது) கலந்து கரைத்து வைக்கவும். தண்ணீர் மிதந்து மாக்கலவை பாத்திரத்தின் அடியில் பால் போல் படிந்திருக்கும் நிலை வந்தபின் தண்ணீரை ஊற்றி விட்டு அடியிலிருக்கும் மாவினை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிரித்தெடுக்கப் பட்ட மாக்கலவையில் வர்ணத்திற்காக சிறுதுளிகள் ஒறேஞ் கலரிங்கை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது சீனியினைக் காய்ச்சத் தொடங்குங்கள். சீனி உருகி வந்தபின் மாக்கலவையை அதனில் போட்டு கரண்டியினால் கிண்டத் தொடங்குங்கள். பதார்த்தம் சட்டியில் ஒட்டாதிருக்கும் பொருட்டு அப்பப்போது நெய் அல்லது வெண்ணையை விட்டு பதமாக வரும் வரை கிண்டிக் கொண்டிருங்கள். சரியான பதத்திற்கு வந்தபின் பொடிதாக்கிய கஜுவினைச் சேர்த்து ஒரு தட்டையான பாத்திரத்தில் பரவி சூடு ஆறியபின் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வெட்டிக் கொள்ளுங்கள்.

மஸ்கற் தயார் சுவைத்துப் பாருங்கள்

2 comments:

Muthu said...

இந்துராணி,
உங்கள் வலைப்பூவே கமகம என்று மணக்கிறது. படிப்பதுடன் நின்றுவிடாமல் அதைச் செய்யத் தூண்டுவதுதான் மிகச் சிறந்த எழுத்து. அந்தவகையில் இன்றுள்ள தமிழ் வலைப்பூக்களில் மக்களின் வாழ்வுக்கு நேரடியாகப் பயனுள்ள வலைப்பதிவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தொடரட்டும் உங்கள் சேவை. :)

Indrany said...

முத்து பாராட்டுக்கு நன்றி.
செய்து பார்த்துவிட்டு திட்டாமல் இருந்தால் சரி