Wednesday, January 12, 2005

முட்டையில்லாத கேக்

முட்டை சைவமா? அசைவமா? பதில் தெரியாமல் குழம்புகிறீர்களா? மற்றவர்கள் கேக் சாப்பிடும் போது அதில் முட்டை போட்டிருக்கிறதே என்னால் சாப்பிட முடியவில்லையே என்று ஆதங்கப் பட்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். முட்டையே போடாமல் உங்களுக்கு ஓரு சுத்தமான சைவ கேக் செய்யும் முறையை சுத்தமாக இங்கே தருகிறோம்.

தேவையான பொருட்கள்
1. ஓரு ரின் மில்க்
2. அரைச் சுண்டு சீனி
3. 250 கிராம் பட்டர்
4. 250 கிராம் கோதுமை மா
5. இரண்டு தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
6. ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா
7. சிறுசிறு துகள்களாக்கிய பேரிச்சம் பழம்(ஒரு கப்)
8. தேவையான அளவு எசன்ஸ்
9. ஒரு தேக்கரண்டி கொக்கோ பவுடர்
10 இரண்டு மேசைக் கரண்டி பால்

செய்முறை
பதார்த்த்தை கலப்பதற்கு முன் அவன்(Oven)ஐ 150C யில் தயார்நிலையில வைத்துக் கொள்ளவும். இவற்றை ஆரம்பிக்குமுன் ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே பேரிச்சம்பழத்துண்டுகளை தேயிலை (இரண்டு பை தேயிலை)யில் ஊற விடவும்.

முதற் கலவை
ரின் மில்க், சீனி,பட்டர் ஆகியவற்றை சீனி முற்றாககக் கரைந்து பதமாக வரும்வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இரண்டாவது கலவை
மா, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் மூன்றையும் ஒன்றாக சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

முதலாவது கலவையுடன் ஏற்கனவே தேயிலையில் ஊறியிருக்கும் பேரிச்சம் பழத் துண்டுகளை எடுத்து கலந்து கொள்ளவும். இதனுடன் இரண்டாவது கலவையை சேர்த்து மரக்கரண்டியால் நன்றாகச் கலந்து கொள்ளவும்.

பின்னர் நன்கு சூடாக்கிய பாலில் பேக்கிங் சோடாவைக் கலந்து தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் கலவையுடன் நன்கு சேர்த்து விடவும். இறுதியாக வனிலா எசனையும் சேர்த்து அவனில் 45 நிமிடம் பேக்கிங் (Bake) செய்தால் உங்களுக்கான வெஜிற்றேரியன் கேக் தயார்.

அவனில் மட்டுமன்றி அவசரத்திற்கு மைக்ரோவேவிலும் இதே போன்று நீங்கள் செய்து கொள்ளலாம். மைக்ரோவேவில் செய்யும் போது பாத்திரத்திற்கு வெண்ணை தடவிக் கொள்ளுங்கள்.

அதுசரி முட்டை சைவமா? அசைவமா?

3 comments:

Kasi Arumugam said...

குறிப்பு நல்லா இருக்கு, கடைசியில் கேட்ட கேள்விக்குத்தான் விடை தெரியலை.

achimakan said...

இந்த சுவையான பதிவிற்கு நன்றி.

முட்டை சைவமா அசைவமா என்பது பற்றி எனது இந்தப் பதிவில் எழுதியுள்ளேன்:
http://achimakan.blogspot.com/2004/11/blog-post_109989415442717442.html

Indrany said...

காசிலிங்கம் அவர்களே எங்கள் சந்தேகத்துக்கு ஆச்சிமகன் தனது பதிவில் நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறார். கவனித்தீர்களா?
பாராட்டுதலுக்கு நன்றி