Friday, November 27, 2009

ஆலங்காய்ப் பிட்டு

ஆலங்காய்ப் பிட்டு என்றால் எனது மகனுக்கு நல்ல விருப்பம். அனேகமான சிறார்களுக்கு இது பிடிக்கும் என்று அடித்துக் கூறலாம். எனது சின்ன வயசில் நான் அதிகம் விரும்பிச் சாப்பிடும் காலை உணவு இதுவே. இப்பொழுதும் மகனுக்குச் செய்து கொடுக்கும் சாக்கில் ஒரு பிடி பிடித்துவிடலாம்

தேவையான பொருட்கள்

ஓரு கப் வறுத்த அரிசிமா
அரை கப் வறுத்த உழுத்தம்மா
ஓரு கப் பசும்பால்
கால் கப் வறுத்த சவ்வரிசி
ஒரு ரின் மில்க் (200 m.l. condensed milk)
இரண்டு தேக்கரண்டி சீனி
சுவைக்காக முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல்
வாசனைக்கு ஏலம்

செய்முறை

அரிசிமா, உழுத்தம்மா அளவான உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பசும்பாலை தண்ணீர் கலந்து மெதுவாகச் சூடாக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது கலந்து வைத்த மாவினுக்குள் மெதுவான சூட்டில் உள்ள பாலை ஊற்றி நன்கு பிசைந்து கொண்டு ஆலங்காய் அளவிலான உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவ் உருண்டைகளை ஆவியில் வேகவைத்து ஒரு பாத்திரத்தில் பரவி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக கொதிக்கும் தண்ணீரில் சவ்வரிசியைப் போட்டு அதனுடன் ரின் மில்க், சீனி போட்டு கிளறியபடியே வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் மா உருண்டைகளையும் போட்டு மெதுவாகக் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல், ஏலம் போட்டு இறக்கி விடுங்கள்.

என்ன ஆலங்காய்ப்பிட்டு கமகமக்கிறதா? சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

Thursday, November 26, 2009

கரமல்புடிங் CARAMEL PUDDING

என்னுடைய பிளாக் பக்கம் நானே வந்து ரொம்ப நாளாச்சு. யாராச்சும் வந்து போன தடயங்களையும் காணோம். கொஞ்ச அவகாசம் எடுத்துக்கலாம் என்றுதான் யோசித்திருந்தேன். வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் என்னைப் புரட்டிப் போட்டு விட்டு போய்விட்டிருக்கின்றன. மெதுவாக எழுந்திருக்கிறேன். காயங்களுக்கு மருந்துகளுக்கு எங்கேயும் போகாமல் என் பிளாக்கிலேயே ஏதாவது செஞ்சுக்கலாம் என்று எட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான். இதே சாட்டிலே சின்னவனுக்கும் ஏதாவது இனிப்பாக செய்து கொடுக்கலாம் என்ற எண்ணமும் சேர்த்துத்தான்.

இன்னிக்கு மதிய சாப்பாட்டுக்கு மேலே இதை என் சின்னவனுக்கு சாப்பிடக் கொடுக்கலாம் என்று இதைச் செய்கிறேன். அவ்வளவு நேரமோ பொருட்களோ தேவைப்படாத சிரமமில்லாத வேலை.

கரமல்புடிங் Caramel pudding

தேவையான பொருட்கள்

கொண்டன் மில்க் ஒரு ரின் (400மிலீ)
சீனி 200கிராம்
தண்ணீர் 200மிலீ
5முட்டை
சிறிதளவு வனிலா

இவை எல்லாவற்றையும் ஒண்ணா கலந்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அடிச்சாச்சா? கலவையை ஒரு பாத்திரத்தில் இட்டுக் கொள்ளுங்கள். இப்போ அவனில் (Oven) தண்ணீர் நிறைந்த தட்டில் கலவை நிறைந்த பாத்திரத்தை வைத்து bake செய்து சுமார் ஒரு மணி நேரத்தில் எடுத்து ஆற வைத்து பரிமாறி நீங்களும் சாப்பிட்டுக் கொள்ளுங்க.

ஐயையோ ஒண்ணு குறிப்பிட மறந்து போச்சு கரமலுக்கு 3 தேக்கரண்டி பிறவுண் சுகரையும் கலவையோடை சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும். மறந்திடாதீங்க.

ஆசியாவிலைதான் அதிகளவு சுகர் பேசண்ட் இருக்காங்களாம். அதனாலை விரும்பினால் மட்டும் இதை செஞ்சு சாப்பிடுங்க. இல்லாட்டி பேசாமல் பதிவை பாத்துட்டு நாக்கை சப்பை கட்டிட்டு போயிட்டுடிருங்க.

Sunday, May 15, 2005

சீடை

சமீபத்தில் ஒரு திருமண வைபவத்திற்குப் போயிருந்தேன். அங்கு பரிமாறப்பட்ட பலகாரங்கங்கள் சுவையாக இருந்தன. மறுப்பதற்கில்லை. அவற்றைச் சுவைக்கும்போது ஊர் ஞாபகங்கள் வந்து போயின. அப்போதெல்லாம் திருமண வைபவத்தில் பரிமாறப்படும் பலகாரங்களில் சீடை முன்னணியில் இருக்கும். உண்ணும் போது சுவையாகவும் தொண்டைக் குழிக்குள் இறங்கும் போது இதமாகவும் கமகம என ஒரு வாசனையும் தரும் அந்த சீடையை இன்று ஏனோ திருமண வைபவங்களில் காண முடியவில்லை. இத்தனைக்கும் அதைச் செய்வது என்னவோ அவ்வளவு சிரமமுமில்லை. திருமணத்திற்கான பலகாரச் சூட்டில் தாய்க்குலங்கள் குழுமியிருந்து ஊர் வம்பு அழந்து கொண்டு சீடையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். பொரித்தெடுத்து ஒரு பெட்டியில் போடும் சீடைகள் ஒரே அளவாக இலந்தைப் பழ அளவில் பார்க்கவே அழகாக இருக்கும். எதற்கும் அதைச் செய்யும் முறையை கீழே எழுதி வைக்கிறேன்.


தேவையான பொருட்கள்
ஒரு கப் வறுத்த அரிசிமா
அரை கப் வறுத்த உழுத்தம் மா
ஒரு தேங்காயைப் பிழிந்தெடுத்த பால்
ஒரு கப் சீனி
ஒரு லீற்றர் எண்ணை

செய்முறை
மெல்லிய சூடான தேங்காய்ப்பாலில் அரிசிமா, உழுத்தம்மா இரண்டையும் குழைத்து பதமாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவினை இலந்தைப் பழ அளவிற்கு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து, அவற்றை எண்ணையில் கலகலக்கப் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொரித்தெடுத்த உருண்டைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் பரவிவைத்துக் கொண்டு சீனியைக் காய்ச்சி அவற்றின் மேல் ஊற்றி விட்டால் சீடை தயார்.

Sunday, February 20, 2005

அப்பம் (வெள்ளையப்பம்)

அப்பம் சாப்பிட்டு நீண்ட நாட்களாச்சு. பாலப்பம், முட்டையப்பம் என்று அந்தநாளில் சாப்பிட்டதெல்லாம் நினைவில் வந்ததால், அப்பம் செய்து சாப்பிட ஆசையும் வந்துவிட்டது.

தேவையான பொருட்கள்
இரண்டு கிண்ணம் வெள்ளை அரிசிமா
ஒரு கிண்ணம் கோதுமை மா
ஒன்றரை தேக்கரண்டி ஈஸ்ற்
ஒரு தேக்கரண்டி சீனி
ஒரு தேக்கரண்டி அப்பச்சோடா (சமையற் சோடா)
இரண்டு மேசைக்கரண்டி ரவை
400 மி.லீற்றர் தேங்காய்ப்பால்
பசுப்பால் (சிறிதளவு)
உப்பு (தேவையான அளவு)

செய்முறை
ரவையை சிறிதளவு பசுப் பால் சேர்த்துக் கஞ்சி போன்று காய்ச்சிக் கொள்ளுங்கள்.

ஈஸ்ற்றை அரைக் கிண்ணம் நகச் சூட்டுத் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடுங்கள். ரவையின் சூடு ஆறிய பின்னர் அதனுடன் வெள்ளை அரிசிமா, கோதுமை மா, சீனி, அப்பச்சோடா, தேங்காய்ப்பால், உப்பு, காய்ச்சி ஆறிய ரவைக் கஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள்.

எமது தேசத்தில் என்றால் இரவு கலவையைச் செய்து வைத்து விட்டு மறுநாள் காலையில் அப்பம் சுட்டுக் கொள்ளுவோம். வெளிநாடுகள் அதுவும் குளிர் பிரதேசங்கள் என்பதால் குறைந்தது இந்தக் கலவையை 20 மணித்தியாலங்களாவது மூடி வைக்க வேண்டும்.

பிறகென்ன எல்லாம் தயார்தானே? அப்பச் சட்டியும் வீட்டில் இருக்கிறதுதானே அப்பத்தை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பாலப்பம் வேண்டுமாயின் அப்பத்தில் கெட்டியான பால் வார்த்து அதற்கு சக்கரை அல்லது கித்துள் அல்லது பனங்கட்டி தூவிக் கொள்ளலாம்.

அப்பம் என்றவுடன் எனக்கு நினைவில் வருவது முட்டையப்பம் தான். அப்பத்தைச் சட்டியில் வார்த்து அதன் நடுப்பகுதியில் முட்டையை உடைத்துப் போட்டு மிளகு உப்பு தூவி வேக வைக்க வேண்டும். முட்டையப்பம் சுவையானது மட்டுமல்ல மஞ்சள், வெள்ளை, தவிட்டு நிறமென பார்க்கவும் அழகாகவும் இருக்கும். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்களேன்

Sunday, February 13, 2005

கத்தரிக்காய் சம்பல்

கத்தரிக்காயில் எத்தனையோ விதமாக சமையல் செய்வார்கள். ஈழத்தில் சாவகச்சேரி என்ற நகரத்தில் கத்தரிக்காயைப் பொரித்து மிளகாய் வெங்காயம் எல்லாம் சேர்த்து ஒருவிதமான துவையல் செய்வார்கள். ஆகா...ஆகா.. என்ன சுவை. அதனோடையே ஒரு கோப்பை சோற்றையே உள்ளே தள்ளிவிடலாம்.

பெரிய கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாகக் கழுவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை எண்ணையில் போட்டு கலகல என வரும் வரை பொரித்து எடுங்கள். பொரித்து எடுத்தாயிற்றா? சிறுசிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயம் (ஒரு வெங்காயம் போதும்) ,பிஞ்சு மிளகாய் (நாலு ஐந்து), தேவைக்களவான உப்பு, தேசிப்பழச் சாறு, அளவான பால் (தேங்காய்ப் பால் அல்லது பசுப்பால்) சேர்த்து கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போ எடுத்து சுவை பாருங்கள். என்ன நல்லா வந்திருக்கா?

இதைப் பற்றி பக்கத்து வீட்டு பருத்தித்துறை அம்மாவிடம் சொன்னேன். அவ சொன்னா "பிள்ளை ஊரிலை கத்தரிக்காயை நெருப்பிலை சுட்டு தோலை உரிச்சு இதே போலைத்தான் செய்யிற நாங்கள். அவையள் தோலோடை பொரிச்சு செய்யினம் நாங்கள் எண்ணையில்லாமல் செய்யிறம் அவ்வளவுதான். "உனக்கு வினாகிரி போட்டு கத்தரிக்காய் சம்பல் செய்யத் தெரியுமே? இப்ப நேரமில்லை பிறகு சொல்லுறன்“

அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும்.

மில்க் ரொபி

அப்பொழுதெல்லாம் பெரியளவில் இனிப்புகள் வாங்கித் தரமாட்டார்கள். ஏதாவது ருசிக்குச் சாப்பிட வேண்டும் அதுவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்றால் மில்க் ரொபி தான் ஆபத்தாண்டவர். இதை வீட்டில் செய்யும் போது மகள் சமையல் பழகுகிறாள் என்ற நினைப்பில் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு இதை எளிதாகச் செய்து கொள்ளவும் முடியும். சரி ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே.

தேவையான பொருட்கள்
ஒரு ரின் மில்க்
ஒன்றரை பேணி சீனி
அரை பேணி தண்ணீர்
வனிலா
தேவையான அளவு கஜூ

செய்முறை
சீனியையும் தண்ணீரையும் சேர்த்துக் காய்ச்சிக் கொள்ளுங்கள். இப்பொழுது ரின் மில்க்கையும் சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். என்ன பதார்த்தம் இறுகி வருகின்றதா? அப்படியானால் வனிலா, கஜூ சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள். இதனை வெண்ணை தடவிய தட்டில் போட்டு நன்றாகப் பரவி விடுங்கள். ஆறிய பின்னர் உங்கள் விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.

Tuesday, February 08, 2005

அச்சாறு

அச்சாறு இருந்தால் போதும் அதனோடையே இரண்டு கோப்பை சோறு சாப்பிட்டு விடுவேன். இப்போ அல்ல அது ஒரு காலம். இப்பொழுது பலவிதமான சாப்பாடுகள் வந்ததால் அச்சாறு எல்லாம் மறந்து போயிற்று. தமிழருக்கு எப்படி ஊறுகாயோ, அப்படி சிங்களவர்களுக்கு அச்சாறு. அரைத்த கடுகு, மிளகு, வினாகிரி என்று எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான சுவை. என்ன நாக்கு ஊறுகிறதா? சரி விடயத்திற்கு வருவோம்.

தேவையான பொருட்கள்
20 சின்ன வெங்காயம் (நம்ம ஊர் வெங்காயம்)
15 பச்சை மிளகாய் (நடுவில் கத்தியால் கீறிக் கொள்ளுங்கள்)
2 கரட் (மெலிதான நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்)
2 கோப்பை வினாகிரி
2 தேக்கரண்டி கடுகு (நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்)
1 தேக்கரண்டி மிளகுத்தூள்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்களவானது

செய்முறை
முதலில் ஒரு கோப்பை வினாகிரியை சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் மெலிதான சூட்டில் வேகவையுங்கள். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மெலிதான சூட்டில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.

இதேபோல் கரட்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு மேலதிகமாக காய்கறிகள் தேவையானால் முள்ளங்கி, காலிபிளவர், பீன்ஸ் போன்றவற்றையும் இதேபாணியில் செய்து சேர்த்துக் கொள்ளலாம். )

சூடாயிருக்கும் வினாகிரியில் மற்றைய கோப்பை வினாகிரியை விட்டு அதனுள் அரைத்தை கடுகு, மிளகுத்தூள், மஞ்சள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கோதித்த வினாகிரியை, ஏற்கனவே வினாகிரியில் சூடாக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறியில் ஊற்றி ஒரு போத்தலில் போட்டு மூடி வையுங்கள்.

இரண்டு நாட்களின் பின்னர் போத்தலின் மூடியைத் திறந்து பாருங்கள். சாப்பிடுவதற்கு அச்சாறு அங்கே தயாராக இருக்கும்.